×

5 நாட்களிலேயே தண்ணீர் நிறுத்தம் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்-காங்கயம் அருகே பரபரப்பு

காங்கயம் : 5  காங்கயம் வாய்க்கால்மேடு பகுதியில் இருந்து தொட்டியபட்டி கிளை கால்வாய்க்கு திறந்து  விடப்பட்ட தண்ணீரை 7 நாட்கள் வழங்காமல் 2 நாட்கள் முன்னதாகவே அடைக்க  வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பிஏபி (பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கடைமடை பகுதியாக வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன பகுதி உள்ளது‌. இக்கால்வாயின் மூலம் காங்கயம் வட்டத்தில் 48 ஏக்கர் பாசன நிலங்கள் சுற்றுகள் அடிப்படையில் 2 ஆண்டுக்கு ஒரு முறை பாசனம் பெற்று வருகிறது.திருமூர்த்தி அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை பகுதிகளை வந்தடைந்துள்ளது. பிஏபி பாசன சட்ட விதிகளின்படி சுற்று ஒன்றுக்கு 7 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிளை கால்வாய்களுக்கு திறக்கப்பட்டு 2 நாட்கள் வழங்கப்படாமல் அடைக்கப்படுகிறது. இதனால் பாசன நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில் நேற்று காங்கயம் பழையகோட்டைரோடு வாய்க்கால்மேடு பகுதியில் இருந்து தொட்டியபட்டி கிளை கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட நீரை 7 நாட்கள் வழங்காமல் 2 நாட்கள் முன்னதாகவே அடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். இதனை அறிந்த வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மதகு பகுதியில் முற்றுகையிட்டு காத்திருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை மதகை அடைக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு வந்த காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் பிஏபி சட்ட விதிகளின்படி 7 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விடாப்பிடியாக தங்கள் கருத்தை வலியுறுத்தி கூறினர். மேலும் விவசாயிகள் மதகை அடைக்க விடாமல் அங்கு குவிந்திருப்பதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் கூறுகையில், ‘‘பிஏபி பிஏபி சட்டம் 20/1993 இன்படி ஒரு சுற்றுக்கு 7 நாட்கள் என மாதத்தில் 14 நாட்களுக்கு ஒரு சுற்று நியாயமான கோரிக்கையை பிஏபி வெள்ளகோவில் கிளைக்கால்வாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் 21 தலைவர்களால் ஒருமனதாக பிஏபி திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் நடத்திய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.ஆனால் அந்த கோரிக்கையை பரிசீலிக்கபடாமல், காங்கயம் வெள்ளகோவில் பகுதிக்கு பிஏபி நிர்வாகம் எங்களது பங்கை கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. தொட்டியபட்டி வாய்க்காலில் 7 நாட்களுக்கு திறக்க வேண்டிய நீர் 5 நாட்கள் மட்டும் விடப்பட்டு மதகை அடைக்க பொதுப்பணித்துறை முயல்வது பிஏபி சட்டங்களின் படி தவறான ஒன்றாகும்’’ என்றனர்.வெள்ளகோவில் கிளைக் கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி கூறுகையில், ‘‘நீதிமன்ற வழக்கு எண் 7719/1994ன் படி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், வழக்கு எண் 3181/2017ல் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகள் மற்றும் பிஏபி திட்டத்தில் நீர் திருட்டு தொடர்பாக 3.11.1967 தேதியிட்ட அரசு ஆணை 2261ன் படி பாசன நீர் திறக்கப்படும் சமயத்தில், வாய்க்காலை ஒட்டி அருகில் உள்ள கிணறுகளில் நீர் எடுக்கக்கூடாது. வாய்க்காலை கடந்து செல்லும் குழாய்களில் தண்ணீர் பாசனத்துக்கு கொண்டு செல்லக் கூடாது உள்ளிட்ட அனைத்தும் விதிகளும் புறக்கணிக்கப்பட்டு முறைகேடான நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. ஒரு சுற்றுக்கு 1.2 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியமில்லாத நிலையில், ஒவ்வொரு சுற்றுக்கும் கிட்டத்தட்ட 2.2 டிஎம்சி தண்ணீர் எடுக்கப்படுகிறது, அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நிறுத்தப்படவில்லை. இவ்வாறு எடுக்கும் அதிகப்படியான நீர் திருட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுக்காமல் 7 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய இடத்தில் 5 நாட்களோடு மதகை அடைப்பதை கண்டித்து அறவழியில் போராடுகிறோம்’’ என தெரிவித்தார்.ஆனால் தற்போது பிஏபி தொகுப்பணைகளான நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட 9 அணைகளும் நிரம்பி வழிந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 5 சுற்றுக்கு பதில் 4 சுற்றுகளாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடைமடை வரை நீர் செல்வதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டிய நிலையில், விவசாயிகள் கண்காணித்து வருவதாகவும், ஊர் முழுக்க வெள்ளக்காடாக உள்ள நிலையில் வெள்ளகோவில் பிஏபி பாசன பகுதி வறட்சியான நிலையிலேயே உள்ளது. எனவே இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்து வரும் விவசாயிகள், முன்னதாக மதகு அடைக்கப்படுவதை கண்டித்து முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது….

The post 5 நாட்களிலேயே தண்ணீர் நிறுத்தம் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்-காங்கயம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gangyam ,Kangyam ,
× RELATED காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம்